தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 'பது சக்தி' (வரிச் சக்தி) என்ற பெயரில் தேசிய வரி வாரம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பணியகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 'பது சக்தி' (வரிச் சக்தி) என்ற பெயரில் தேசிய வரி வாரம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பணியகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய வருமான ஈட்டலில் ஈடுபடும் பிரதான மூன்று திணைக்களங்களுடன் இணைந்து இந்த வரி வாரத்தை பிரகடனம் செய்துள்ளன. இந்த தேசிய வரி வாரம் 2026 ஜூலை 06ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய வரி வாரத்தின் ஆரம்ப விழா, எதிர்வரும் 6ஆம் திகதி சபாநாயகரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விபரங்கள் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. வரிகள் விதிப்பது மற்றும் வரி செலுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடையே காணப்படும் எதிர்மறையான அணுகுமுறைகளை நேர்மறையானதாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குடிமக்கள் அனைவரும் தன்னிச்சையாகவும் தானாகவும் முன்வந்து வரி செலுத்தும் ஒரு புதிய கலாச்சாரத்தை நாட்டுக்குள் உருவாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படை இலக்கு என ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின் பணிப்பாளர் அசித முணசிங்க தெரிவித்துள்ளார்.

