தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை தனது 90ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அண்மையில் பிறந்து மக்களின் பேராதரவைப் பெற்ற இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை ஜூலை 3ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. விலங்கு பிரியர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளில் இருந்தே இந்த பெயர்கள் தே…

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை தனது 90ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அண்மையில் பிறந்து மக்களின் பேராதரவைப் பெற்ற இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை ஜூலை 3ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

விலங்கு பிரியர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளில் இருந்தே இந்த பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், பெயர்களைப் பரிந்துரைத்தவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த அறிவிப்பானது, எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமையவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, மிருகக்காட்சிசாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் அவற்றின் தாயுடன் ஒன்றாகப் பார்ப்பதற்கான வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த நைல் நதி நீர்யானைக் குட்டியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதுடன் அதற்குப் பெயரிடுவதற்காக 18 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான சிறப்புப் போட்டி ஒன்றையும் நடத்தவுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 90ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது