தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட போராட்டங்களின்போது, வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 900-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அங்குள்ள உள்ளூர் அமைப்புகள், ஆவணங்களற்ற புலம்பெ…

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட போராட்டங்களின்போது, வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 900-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அங்குள்ள உள்ளூர் அமைப்புகள், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் நாட்டை விட்டு வெளியேற விதித்திருந்த காலக்கெடு நேற்றுடன்(30.6.2026)நிறைவடைந்ததை அடுத்து இந்த போராட்டங்கள் வெடித்தன.

நாடு முழுவதும் நடைபெற்ற 120 பேரணிகளில் பெரும்பாலானவை அமைதியாக நடந்தபோதிலும், சுமார் 12 இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின.தாக்குதல்கள் அங்குள்ள கடைகள் சூறையாடப்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஜோகன்னஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தினர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வெளிநாட்டினர் மட்டுமன்றி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த உள்ளூர்வாசிகளும், சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் அடங்குவர் என்று அந்நாட்டு பொலிஸ்துறை துணை ஆணையர் டெபெல்லோ மொசிகிலி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே வெளிநாட்டினருக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

வெளிநாட்டவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்படும் இத்தகைய சம்பவங்கள் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், தற்போதைய பதற்றமான சூழலைத் தணிக்க கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.