திறைசேரியில் இருந்து இணையவழியில் கொள்ளையடிக்கப்பட்ட 2.5 மில்லியன் டொலரை அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பிச் செலுத்த இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. அடையாளம் தெரியாத ஹேக்கர்களின் இணையவழித் தாக்குதலால் இலங்கை இழந்த 2.5 மில்லியன் டொலரை மீட்பதற்காக நிதி அமைச்சு தற்போது அவுஸ்திரேலிய அதிகாரிக…

திறைசேரியில் இருந்து இணையவழியில் கொள்ளையடிக்கப்பட்ட 2.5 மில்லியன் டொலரை அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பிச் செலுத்த இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. அடையாளம் தெரியாத ஹேக்கர்களின் இணையவழித் தாக்குதலால் இலங்கை இழந்த 2.5 மில்லியன் டொலரை மீட்பதற்காக நிதி அமைச்சு தற்போது அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைப்படி, நிலுவையில் உள்ள தொகையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.திறைசேரிக் கொள்ளை புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தைக் குறிவைத்த இந்த இணையவழித் திருட்டு, திட்டமிட்ட டிஜிட்டல் வலையமைப்பு மீறல் மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய இறையாண்மைக் கடன் தொகை மற்றொரு கணக்கிற்குத் திசை திருப்பப்பட்டபோது நிகழ்ந்தது. புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவுப் பற்றாக்குறைகளைத் தவிர்ப்பதற்கான தற்போதைய செயல்திறன் அளவுகோலை அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தத் தவறியதன் மூலம் மீறியுள்ளதால், இந்தச் சம்பவம் இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் விளைவாக, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் தொடர்புடைய நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செலுத்தப்படாத தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.002 சதவீதம் மட்டுமே என்பதால், இந்த மீறல் சிறியது என்றும், தவறறைத் திருத்துவறதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தல் இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தொகையைச் செலுத்துவதற்கு நிதி அமைச்சு புதிய ஏற்பாடுகளைச் செயல்படுத்தி வருவதாக ஓர் இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.'இந்தப் பிரச்சினை வரும் மாதங்களில் முழுமையாகத் தீர்க்கப்படும். இலங்கையில் திட்டமிடப்பட்ட மற்ற கடன் திருப்பிச் செலுத்துதல்கள் எவ்வித இடையூறும் இன்றி வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன' என்றும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிசாரின் உதவியுடன், இந்த இணையவழித் திருட்டு குறித்து இலங்கை அதிகாரிகள் தற்போது ஒரு விரிவான விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு தொகையை, வங்கிக் கணக்கு விவரங்களைத் தவறாக மாற்றி மற்றொரு கணக்கிற்குத் திசைதிருப்ப குற்றவாளிகள் முயன்ற பின்னரே, இந்த மாபெரும் இணையவழித் திருட்டின் முழுமையான தன்மை வெளிப்பட்டது என்று பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ முன்னதாக தெரிவித்திருந்தார்.