வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில் புதிய கட்டணங்கள் இன்று (06) முதல் அமுலுக்கு வந்துள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) கடந்த வாரம் அனுமதி வழங்கிய இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்கள் 12% முதல் 20% வரை உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, குறைந்தபட்ச ப…

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில் புதிய கட்டணங்கள் இன்று (06) முதல் அமுலுக்கு வந்துள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) கடந்த வாரம் அனுமதி வழங்கிய இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்கள் 12% முதல் 20% வரை உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவிலிருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சொகுசுப் பேருந்துகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்து சேவைகளுக்கான கட்டணங்களும் புதிய விகிதங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன.

புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்துவதற்காக, பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை புதிய கட்டணங்களுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் முறையாக அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனினும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவிக்கையில், பயணச்சீட்டு இயந்திரங்களை முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகளை நிறைவு செய்ய இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.