எம்.எச்.எம். சியாஜ் புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் ஆள் நடமாட்டமற்ற, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பாலாவி, வன்னித்தீவு, சுருவம் மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய செனத் தில்ஹா…

எம்.எச்.எம். சியாஜ்

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் ஆள் நடமாட்டமற்ற, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பாலாவி, வன்னித்தீவு, சுருவம் மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய செனத் தில்ஹார என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துடிப்பான வயதில், வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு இளம் உயிர், ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மர்ம மரணத்தின் பின்னணி குறித்து உறவினர்களிடம் இருந்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞருக்கு அண்மைய நாட்களாகக் காதல் விவகாரம் ஒன்று இருந்ததாகவும், அது தொடர்பான மன உளைச்சலில் சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது கைகளைத் தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தக் காதல் விவகாரமே அவரை இந்த விபரீத முடிவை நோக்கித் தள்ளியிருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், இது தற்கொலையா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மர்மங்கள் ஒளிந்திருக்கின்றனவா என்ற கேள்விகளுக்கு இன்னும் முறையான பதில்கள் கிடைக்கவில்லை. உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் குறித்துப் புத்தளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இளம் உயிரின் பிரிவுக்குக் காரணமான உண்மைப் பின்னணி என்ன என்பது, பொலிஸாரின் விரிவான விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கைகளின் பின்னரே முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.