தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், தொழிற்சங்கங்களை நசுக்கி அழிக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றது என்று சுகாதாரத் தொழில்முறை நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சம…
தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், தொழிற்சங்கங்களை நசுக்கி அழிக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றது என்று சுகாதாரத் தொழில்முறை நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் தொழிற்சங்க உரிமைகள் மீதான அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளையும் நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் 'தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம்' உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் இன்று பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. தொழிலாளர்களுக்குரிய உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், குறைந்தபட்ச சமூக உரையாடல்களுக்கான வாய்ப்புகூட இல்லாத நிலை காணப்படுகின்றது.சுதந்திரமாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம்ஆளும் தரப்பினருடனோ அல்லது அமைச்சர்களுடனோ தொழிற்சங்கங்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.
தொழிலாளர் அமைச்சின் ஊடாகச் சில தொழிற்சங்கங்களைச் செயலிழக்கச் செய்வதற்கும், அவற்றுக்குள் திட்டமிட்டுப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மற்றொரு புறம், நாட்டில் வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் பெற்றுவரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல்
நாட்டில் தொழிற்சங்க கட்டளைச் சட்டம் அமலில் உள்ளதுடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 87 மற்றும் 88ஆம் இலக்க உடன்படிக்கைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான தேசிய மற்றும் சர்வதேச சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஜனநாயகச் சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதை விடுத்து அவற்றின் மீது அழுத்தம் செலுத்துவதோ அல்லது தலையீடு செய்வதோ ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
தற்போதைய இக்கட்டான நிலைமையைத் தனித்தனியாக எதிர்கொள்வது சாத்தியமற்றது. அதனால்தான், கடந்த 3ஆம் திகதி கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் அரச, தனியார் மற்றும் அரை அரச துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துச் சுயாதீன மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து இந்த 'தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை' நாம் நிறுவியுள்ளோம்.
இந்த மத்திய நிலையம் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தொழிற்சங்க சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

