யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவரை, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் அடங்கிய ‘மேகஸின்’ (Magazine) ஒன்றைக் காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டில், சீதாவக்க கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செ…

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவரை, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் அடங்கிய ‘மேகஸின்’ (Magazine) ஒன்றைக் காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டில், சீதாவக்க கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் ஆவார்.

குறித்த பொறுப்பதிகாரி, கடந்த 26-ஆம் திகதி காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தருடன் இணைந்து மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அன்று மாலை 5:45 மணியளவில் பொலிஸ் போக்குவரத்துப் பதிவேட்டில் தமது வருகையைப் பதிவு செய்துள்ள போதிலும், அவர் பயன்படுத்திய ‘14931’ இலக்கமுடைய துப்பாக்கியையும், அதிலிருந்த 10 தோட்டாக்கள் மற்றும் ‘மேகஸினை’யும் மீண்டும் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கவில்லை என்பது விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சீதாவக்க கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட அதிகாரி முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலத்தை அளித்துள்ளார். தான் பொறுப்பேற்ற துப்பாக்கியை குறித்த கடமைக்காக எடுத்துச் செல்லவில்லை என்றும், அது மேசை இழுப்பறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போய்விட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சீதாவக்க கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.