ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சுமார் 90 நிமிடங்கள் நீடித்த முக்கிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளனர். இந்த உரையாடலின் போது, உக்ரைன் போருக்கு விரைவில் முடிவுகாண உதவத் தயாராக இருப்பதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதாக ரஷ்ய வெளி…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சுமார் 90 நிமிடங்கள் நீடித்த முக்கிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளனர். இந்த உரையாடலின் போது, உக்ரைன் போருக்கு விரைவில் முடிவுகாண உதவத் தயாராக இருப்பதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துருக்கியில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டுக்கு முன்னதாக இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மேலதிக பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை ரஷ்யப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தப் பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ரஸ்யாவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மறுபுறம், உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகளை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் குறிவைத்து வருகிறது. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 250ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, டிரம்புக்கும் அமெரிக்க மக்களுக்கும் புடின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில் இரு தலைவர்களும் நடத்திய நான்காவது தொலைபேசி உரையாடல் இதுவாகும். இந்த உரையாடல் "தொழில்முறை மற்றும் மிகவும் ஆக்கபூர்வமானதாக" அமைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் மோதலில் போர் நடவடிக்கைகளை விரைவாக நிறுத்துவதற்கு உதவத் தயாராக இருப்பதாக டிரம்ப் மீண்டும் உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த உரையாடல் தொடர்பாக வெள்ளை மாளிகையிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் தரப்பில், உக்ரைன் மோதலுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகளின் மூலம் தீர்வு காண்பதே தங்களின் விருப்பம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், "உக்ரைன் அரசும் அதற்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகளும் போரை நீடிக்கவும் மேலும் தீவிரப்படுத்தவும் முயல்கின்றன" என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், போர்க்களத்தில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் புடின் தெரிவித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியும் சனிக்கிழமை டிரம்புடன் மிகவும் சிறப்பான தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.