சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில் மெக்சிகோ அணி வரலாற்று வெற்றி பெற்றதை நள்ளிரவில் வீதிகளில் திரண்டு கொண்டாடிய ரசிகர்களில், மூச்சுத்திணறல் காரணமாக மூவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் மெக்சிகோ நகரில் இ…
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில் மெக்சிகோ அணி வரலாற்று வெற்றி பெற்றதை நள்ளிரவில் வீதிகளில் திரண்டு கொண்டாடிய ரசிகர்களில், மூச்சுத்திணறல் காரணமாக மூவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் மெக்சிகோ நகரில் இடம்பெற்றுள்ளது.
ஈக்குவடோருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ண விலகல் சுற்றில் மெக்சிகோ வெற்றி பெற்றதை அடுத்து, தலைநகரின் பிரதான மத்திய அவெனியூவில் இலட்சக் கணக்கான ரசிகர்கள் திரண்ட போதே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் விபரங்கள்:
நெரிசலில் மூச்சுத் திணறல்: மெக்சிகோ போட்டியைக் காண்பிப்பதற்காகப் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற 'பசியோ டி லா ரெஃபார்மா' (Paseo de la Reforma) வீதியின் வெவ்வேறு பகுதிகளில் மயக்கமடைந்த நிலையில் மூவர் அவசர சிகிச்சை பிரிவினரால் மீட்கப்பட்டனர். உயிரிழப்பு விபரங்கள்: தீவிர முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் 19 வயதுடைய இளம் பெண் ஒருவரும், 44 வயதுடைய ஆண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர். 48 வயதுடைய மற்றொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். நான்காவது மரணம்: தீவிர வலிப்பு மற்றும் குடல் இரத்தப்போக்குக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூட்ட நெரிசலும்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து மெக்சிகோ இம்முறை உலகக்கிண்ணத்தை நடத்தும் நிலையில், அணியின் ஒவ்வொரு வெற்றியின் போதும் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.
பாதுகாப்பைக் கருதி மெக்சிகோ விளையாடும் நாட்களில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், திரைகளுக்கு இடையிலான இடைவெளிகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை அன்று மாத்திரம் 2 கிலோ மீற்றருக்கும் அதிகமான வீதி மூடப்பட்டு இராட்சத திரைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தலைநகரில் மாத்திரம் சுமார் ஒரு மில்லியன் இரசிகர்கள் திரண்டிருந்ததாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

