அமெரிக்க அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ஃபோலரின் பலோகனுக்கு (Folarin Balogun) விதிக்கப்பட்ட சிவப்பு அட்டை மற்றும் ஒரு போட்டி தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தான் தனிப்பட்ட முறையில் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிர…
அமெரிக்க அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ஃபோலரின் பலோகனுக்கு (Folarin Balogun) விதிக்கப்பட்ட சிவப்பு அட்டை மற்றும் ஒரு போட்டி தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தான் தனிப்பட்ட முறையில் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த விவகாரம் உலகக் கோப்பை அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திங்கள்கிழமை இரவு பெல்ஜியத்திற்கு எதிரான 'ரவுண்ட் ஆஃப் 16' (சுற்று 16) போட்டியில் பலோகன் விளையாட தகுதி பெற்றுள்ளார் என்று ஃபிஃபா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இது இந்தத் தொடரின் நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மை குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நான் வெறும் மறுபரிசீலனை செய்யத்தான் கேட்டேன். 'நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்' என்று நான் கூறவில்லை. அது ஃபவுல் (foul) என்று எனக்குத் தோன்றவில்லை. இரண்டு வீரர்கள் முழு வேகத்தில் ஓடும்போது எதிர்பாராமல் மோதிக்கொண்டதுதான் அது. அமெரிக்க வீரர் எந்தத் தவறும் செய்யவில்லை என் கூறினார்.ஃபிஃபா தலைவருடன் தனக்கு இருக்கும் நெருங்கிய நட்பு மற்றும் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் விரிவாகப் பேசுவது இதுவே முதல் முறை. அவர் என்ன செய்ய வேண்டும் என்று நான் உத்தரவிடவில்லை, என்னால் உத்தரவிடவும் முடியாது. ஒரு சுதந்திரமான குழு சரியான முடிவை எடுத்துள்ளது என்றும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார். இந்த சர்ச்சை குறித்து எக்ஸ் (X) தளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, டிரம்பின் அழைப்பை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், பலோகனின் தடை நீக்க முடிவு ஃபிஃபாவின் சுதந்திரமான ஒழுக்காற்று குழுவால் எடுக்கப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள உலகத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் பல விவகாரங்கள் குறித்து தன்னிடம் பேசுவது வழக்கம் என்றும், அந்த வகையிலேயே டிரம்பும் பேசியதாகவும், இந்த விடயம் உரிய சட்ட விதிகளின்படி தகுதிவாய்ந்த குழுவால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது என்றும் இன்ஃபான்டினோ விளக்கமளித்துள்ளார். போட்டியின் நடுவர் மீது சந்தேகம் எழுப்பியுள்ள டிரம்ப், "அவரது கடந்த கால வரலாற்றைச் சோதித்துப் பார்க்க வேண்டும்" என்று செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியின் போது, களத்தில் இருந்த நடுவர் முதலில் அதை ஃபவுல் என்று அறிவிக்கவில்லை. ஆனால், வீடியோ உதவி நடுவர் (VAR) தலையிட்ட பிறகே அது குறித்து ஆராயப்பட்டது. உலகக் கிண்ண விதிகளுக்கு மாறாக, மிக மெதுவான ரீப்ளே (slow motion replays) காட்சிகள் நடுவருக்குக் காட்டப்பட்டதாகவும், அதில் பலோகனின் காலணிகள் போஸ்னிய வீரரின் கணுக்காலில் படுவது தெரிந்ததால் அது "தீவிரமான ஃபவுல்" எனக் கருதப்பட்டு அவருக்குச் சிவப்பு அட்டை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முடிவை "கொடியது" மற்றும் "அநீதியானது" என்று வர்ணித்த டிரம்ப், பலோகன் விளையாட முடியாமல் போயிருந்தால் அது இந்தத் தொடருக்கே ஒரு "பெரிய கறை" ஆகியிருக்கும் என்றார். அதிபர் டிரம்ப் விளையாட்டு பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறினாலும், சிவப்பு அட்டை வழங்கப்பட்டால் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்பது தனக்கு முதலில் தெரியாது என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த மேல்முறையீட்டுச் செயல்முறைக்காக அமெரிக்க அரசு ஃபிஃபாவிடம் "கூடுதல் ஆதாரங்களை" வழங்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், ஆனால் அந்த ஆதாரங்கள் என்னவென்று கூற மறுத்துவிட்டார். மறுபுறம், திங்கள்கிழமை இரவு நடக்கவிருக்கும் போட்டியில் பலோகன் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல்ஜிய கால்பந்து சங்கம் ஃபிஃபாவிடம் மேல்முறையீடு செய்துள்ளது. ஃபிஃபாவிடமிருந்து தங்களுக்கு முறையான விளக்கமோ, முடிவோ இன்னும் வரவில்லை என்பதால், இந்தத் தகுதியை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நேட்டோ (NATO) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டிரம்ப் துருக்கிக்குச் சென்றுகொண்டிருக்கும் அதே வேளையில், திங்கள்கிழமை மாலை அமெரிக்க அணி மற்றுமொரு நேட்டோ உறுப்பு நாடான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

