விதி யாரை எப்போது, எப்படிச் சோதிக்கும் என்று சொல்ல முடியாது என்பதற்குச் சான்றாக, எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பெங்களூரு ராஜாஜிநகர், ராம் மந்திர் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது காய்ந்த மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில், அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில…
விதி யாரை எப்போது, எப்படிச் சோதிக்கும் என்று சொல்ல முடியாது என்பதற்குச் சான்றாக, எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு ராஜாஜிநகர், ராம் மந்திர் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது காய்ந்த மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில், அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜாஜிநகரைச் சேர்ந்த சதீஷ் (52), நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் 24-ஆம் திகதி காலை, தொழில் நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். இச்சம்பவத்தின்போது அவர் தலைக்கவசம் (Helmet) அணியாமல் சென்றது குறிப்பிடத்தக்கது.
அவர் ராம் மந்திர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மேலிருந்து காய்ந்த மரக்கிளை ஒன்று அவரது தலை மீது விழுந்தது. பலத்த காயமடைந்த அவர், வாகனத்துடன் வீதியின் நடுவே விழுந்து சுயநினைவை இழந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவிக்கு பின்னர், அவர் யஷ்வந்த்பூர் மணிப்பால் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
மறுநாள் (ஜூன் 25) மூளையில் இரத்தம் உறைந்ததால், இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சதீஷின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால், அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இந்த விபத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெங்களூரு மேற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராகத் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றுமாறு ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதே இந்த விபரீதத்திற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

