உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசு குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு இதுவரையில் எ…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசு குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு இதுவரையில் எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, "உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விவகாரத்தை அரசு தனது அரசியல் தேவைக்காகவே பயன்படுத்திக் கொள்கின்றது. அப்பட்டமான அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானும் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அரசியல் பழிவாங்கல்களுக்கே உள்ளாக்கப்பட்டுள்ளார்.சுரேஷ் சலேவின் கைது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல முக்கிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார் என்று ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அண்மையில் தெரிவித்திருந்தனர். ஆனால், நீதிமன்றதத்துக்கு இதுவரையில் அவ்வாறு எந்தவொரு விடயமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தக் குண்டுத்தாக்குதல்கள் குறித்து முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், விசாரணைகள் என்ற போர்வையில் தற்போது நாட்டில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் மாத்திரமே அரங்கேறி வருகின்றன.
சுரேஷ் சலேவின் கைது மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அவரிடம் நான் 10 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.எனினும், அந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் அவரிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

