சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் 'வாரி மஹிம – எமது பாரம்பரியம்' தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…
சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் 'வாரி மஹிம – எமது பாரம்பரியம்' தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவி ஊற்றுக்குளத்தில் இந்தத் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான புனரமைப்புப் பணிகளை 75 நாட்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் குளத்தின் கீழ் தற்போது 70 ஏக்கர் நிலப்பரப்பிலேயே விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குளத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் சுமார் 600 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளக்கூடிய சிறப்பான நிலைமை உருவாகும்.
இந்நிகழ்வில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த, பிரதி அமைச்சர் கௌரவ அரவிந்த செனரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ செ.திலகநாதன் மற்றும் கௌரவ ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், திட்டப் பணிப்பாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகள் கௌரவமாக வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய வேலைத்திட்டத்தின் பெயர்ப்பலகை அமைச்சரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் குளத்தின் புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக, மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த, வடக்கு மாகாண மக்களின் விவசாயக் காணிகள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல தடவைகள் தன்னிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செ.திலகநாதனும் இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணம் போர் காரணமாகச் சகல விடயங்களிலும் கடும் பாதிப்புக்களையும் பின்னடைவுகளையும் சந்தித்திருந்தது. இங்குள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்பும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மறுசீரமைக்கும் நோக்கில் குளங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்தது. அதன் காரணமாகவே இந்தத் தேசிய வேலைத்திட்டத்தை முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நாம் ஆரம்பித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.
நெல் கொள்வனவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பெரும்போகத்தின் போது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலைக்கு விவசாயிகள் தமது நெல்லை நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கவில்லை என்றும், விலை இன்னமும் அதிகரிக்கும் என அவர்கள் காத்திருந்தனர் என்றும் சுட்டிக்காட்டினார். நெற்சந்தைப்படுத்தல் சபையானது தொடர்ச்சியாக நெல்லைக் கொள்வனவு செய்ய முடியாது, அறுவடைக் காலத்தில் மாத்திரமே கொள்வனவு செய்யும். அவ்வாறு நெல்லை விற்பனை செய்யாது வைத்திருந்த விவசாயிகளே, நெல் விலை வீழ்ச்சியடைந்தமையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இம்மாகாணத்தில் நெற் களஞ்சியசாலைகளின் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், தற்போது சிறுபோக அறுவடைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், நெற்சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவற்றை நியாய விலையில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நெல்லைக் கொள்வனவு செய்யும் தனியார் வர்த்தகர்களுக்கு ஒரு தெளிவான விடயத்தை அறிவுறுத்த விரும்புகின்றேன். அரசாங்கம் நிர்ணயித்த விலையை விடக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வது சட்டப்படியான குற்றமாகும். அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக நாம் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுப்போம். நெல்லைக் கொள்வனவு செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்களுடனும் நாம் சந்திப்புக்களை நடத்தவுள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதில் அவர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன என்பது குறித்துக் கேட்டறியவுள்ளோம். மக்களுக்கான இந்த அரசாங்கம் எப்போதும் மக்களின் பக்கமே நிற்கும் என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது இலஞ்சம் வாங்குவதில்லை என்றும், ஆனால் அரச திணைக்களங்களில் ஓரிரு இடங்களில் இன்னமும் அரச அதிகாரிகள் இலஞ்சம் வாங்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவற்றையும் அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்கும் என உறுதியளித்த அவர், அரசாங்கம் இந்த நாட்டை முன்னேற்றுவதற்காக 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றது. ஆனால் அரச இயந்திரம் 8 மணி நேரம் மட்டுமே இயங்குகின்றது. சில இடங்களில் அந்த 8 மணி நேரம் கூட அரச அதிகாரிகள் முழுமையாக வேலை செய்வதில்லை என மக்கள் குறை கூறுகின்றனர். அரச அதிகாரிகள் அந்த 8 மணி நேரம் வேலை செய்தால் போதுமானது, ஆனால், அந்த 8 மணி நேரமும் நாட்டு மக்களுக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட செயலகம் முல்லைத்தீவு

