சிறுமி ஒருத்தி கறுப்பு நிறப் பூனையைக் கையில் ஏந்திச் செல்ல, அவளுக்குப் பின்னால் ஒரு முள்ளம்பன்றி பின்தொடர்ந்து வயல்வெளி பாதையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று, வங்கதேசத்தின் கிராமப்புறக் காட்சி எனப் பேஸ்புக்கில் பலரால் பகிரப்பட்டு வந்தது. இந்தியாவின் ‘தி டெலிகிராப்’ (The Telegrap…

சிறுமி ஒருத்தி கறுப்பு நிறப் பூனையைக் கையில் ஏந்திச் செல்ல, அவளுக்குப் பின்னால் ஒரு முள்ளம்பன்றி பின்தொடர்ந்து வயல்வெளி பாதையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று, வங்கதேசத்தின் கிராமப்புறக் காட்சி எனப் பேஸ்புக்கில் பலரால் பகிரப்பட்டு வந்தது.

இந்தியாவின் ‘தி டெலிகிராப்’ (The Telegraph) நாளிதழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அதில் அந்தச் சிறுமி வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்ததுடன், #Bangladesh என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியிருந்தது.

இந்தத் தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க, ‘ஸ்ட்ரீம்’ (Stream) நிறுவனம் அந்த வீடியோவின் காட்சிகளைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் தேடல் (Reverse image search) ஒன்றை மேற்கொண்டது. அந்தத் தேடலில், இது இலங்கையில் படமாக்கப்பட்ட காட்சி என்பது உறுதியானது. சிங்கள மொழியில் “ගමක අසිරිය සංහිදියාව හා සුන්දර ලමාවිය” (கிராமத்தின் அழகு, நல்லிணக்கம் மற்றும் அழகான குழந்தைப்பருவம்) என்ற தலைப்புடன் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மேலதிக விசாரணையில், ‘பிரபாத் சில்வா’ (Prabath Silva) என்ற பேஸ்புக் கணக்கில் ஜூன் 11-ஆம் திகதி இந்த வீடியோ முதன்முதலில் பதிவேற்றப்பட்டது கண்டறியப்பட்டது. அதன் தலைப்பு, “අක්කා එක්ක කුබුරු යන ඉත්තෑ මල්ලි” (தனது அக்காவோடு வயல்வெளிக்குச் செல்லும் முள்ளம்பன்றிச் சகோதரன்) என்று சிங்கள மொழியில் இருந்தது.

அதே கணக்கில் அந்தச் சிறுமி மற்றும் முள்ளம்பன்றி தொடர்புடைய வேறு பல வீடியோக்களும் உள்ளன. ஜூன் 14-ஆம் திகதி பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில் முள்ளம்பன்றிக்குப் பால் புகட்டும் காட்சியும், ஜூன் 20-ஆம் திகதி பதிவேற்றப்பட்ட மற்றொன்றில் சிறுமி அந்த விலங்குடன் விளையாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சிங்கள மொழியிலேயே தலைப்பிடப்பட்டுள்ளன.

மேலும், அந்தக் கணக்கின் சுயவிவரத்தில் (Profile) இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை, இந்த வீடியோ இலங்கையைச் சேர்ந்தது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு ‘ஸ்ட்ரீம்’ நிறுவனம் ‘பிரபாத் சில்வா’விடம் பேஸ்புக் வாயிலாகத் தொடர்பு கொண்ட போதிலும், செய்தியை வெளியிடும் வரை அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.