மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசியை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் ரூ.7,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட ஓ…

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசியை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் ரூ.7,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த மே 27 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்களான சீ. ரவிகரன் மற்றும் த. ரிஷிகோபன் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது, வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசி மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையிலும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குறித்த அரிசி உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிவான் கடை உரிமையாளருக்கு ரூ.7,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதுபோன்ற பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தரமற்ற மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.