வவுனியா மாநகர சபை மேயரின் ஆடை, பதக்கம் மற்றும் சபையின் செங்கோல் ஆகியவை காணாமற்போன விவகாரம் தொடர்பான வழக்கில், மேயர் காண்டீபனின் பெயரும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (03.07.2026) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேயர் காண…

வவுனியா மாநகர சபை மேயரின் ஆடை, பதக்கம் மற்றும் சபையின் செங்கோல் ஆகியவை காணாமற்போன விவகாரம் தொடர்பான வழக்கில், மேயர் காண்டீபனின் பெயரும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (03.07.2026) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேயர் காண்டீபன் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி, அவரது பிரசன்னத்தை பதிவு செய்துள்ளார்.

மேயர் மீதான குற்றச்சாட்டு இதன்போது, மேயர் காண்டீபனை பதவிநீக்கம் செய்ய வடக்கு ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று(03) முற்பகல் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து சுமந்திரன் சில விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மூன்று பொருட்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து, அவற்றை மேயர் காண்டீபன் திருடியதாக குற்றம் சாட்டி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இது வழக்கத்திற்கு மாறானதொரு வழக்காக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா மாநகர சபையின் சட்டபூர்வமான மேயர் காண்டீபனே என்பதையும், மேல் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அதனை உறுதிப்படுத்தியிருப்பதையும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

கைது உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை...

மேலும், காணாமல் போயுள்ளதாக கூறப்படும் செங்கோல், பதக்கம் மற்றும் மேயரின் ஆடை ஆகியவை அனைத்தும் மேயரின் கட்டுப்பாட்டிலும் அவரது பாவனையிலும் உள்ள பொருட்களாகும்.அவற்றை அவரே திருடியதாக குற்றம் சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது விசித்திரமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கில் நீதிமன்றம் அழைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேயர் காண்டீபன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார் என்பதையும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேயர் காண்டீபனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்றும், அவ்வாறான எந்தவொரு கைது உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.