இலங்கையில் தேங்கிக்கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காண, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் தாமதங்கள் மற்ற…

இலங்கையில் தேங்கிக்கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காண, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் தாமதங்கள் மற்றும் நீதியரசர்களின் சேவைக்கால நீடிப்பு தொடர்பான சர்ச்சைகள் குறித்து, கொழும்பில் இன்று (06.07.2026) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.வழக்கு விசாரணை அவர் அங்கு மேலும் கூறுகையில், இலங்கை நீதிமன்றங்களில் தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, ஒரு வழக்கின் விசாரணை முடிவடைவதற்கே 10 முதல் 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் காணப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 70 அல்லது 75 ஆகக் காணப்படுகின்றது. தொழில்முறை ரீதியாக அனுபவம் முதிர்ச்சியடையும் போதே சிறந்த நிபுணத்துவம் கிடைக்கும் என்பதால், மூத்த நிபுணர்களின் சேவையை நாடு தொடர்ந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் போது நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படவில்லை.நீதியரசர்களின் சேவைக்காலம்அன்று ஏற்பட்ட அந்தத் தவறைச் சரி செய்வதற்கே தற்போதைய திருத்தங்கள் மூலம் முயற்சிக்கப்படுகின்றது. கீழ் நீதிமன்றங்கள் முதற்கொண்டே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் போது, அது அந்தத் துறையிலுள்ள அதிகாரிகளுக்குப் பெரும் சாதகமாக அமைவதோடு நாட்டுக்கும் நன்மையளிக்கும்.

நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடிப்பதன் மூலம் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றேன். இலங்கையின் நீதித்துறை எப்போதும் சுதந்திரமாகவே இயங்கி வருகின்றது. அரசியல்வாதிகளால் நீதிமன்றங்களின் மீது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது. அதேவேளை, தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்குத் தராதரமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோதே இது தொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தேன். சில நாடுகளில் வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு உள்ளது. இலங்கையிலும் அத்தகைய காலக்கெடு முறையொன்றை உருவாக்கி, நீதிமன்றக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான உகந்த சூழலை உருவாக்கவும் நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடிப்பது மிக அவசியமான ஒன்றாகும் என்றார்.