ஸ்பெயின் நாட்டில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 6,09,737 பேருக்கு தற்காலிக வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் தங்க…
ஸ்பெயின் நாட்டில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 6,09,737 பேருக்கு தற்காலிக வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அவர்கள் தங்களது குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் காலத்திலேயே நாட்டின் அதிகாரப்பூர்வப் பொருளாதாரத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.6 இலட்சம் புலம்பெயர்ந்தோர்
கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்பாக குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் ஸ்பெயினில் வசித்த, எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு ஓராண்டு கால புதுப்பிக்கத்தக்க வசிப்பிட உரிமத்தை வழங்கும் இத்திட்டம், கடந்த ஏப்ரல் 16 முதல் ஜூன் 30 வரை செயல்பாட்டில் இருந்தது. அரசாங்கம் முதலில் 5,00,000 பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று கணித்திருந்த நிலையில், எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்கு அதிகமாக மொத்தம் 11.7 இலட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இதில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு
தற்காலிக வேலை அனுமதி பெற்ற 6 இலட்சத்திற்கும் அதிகமானோரில், சுமார் 1,60,000 பேர் ஜூன் 30க்குள் முறையான வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளதாகவும், இதுவரை 11,000 பேருக்கு ஓராண்டு வசிப்பிட அனுமதி முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்பெயின் நாட்டின் புலம்பெயர்தல் துறைச் செயலாளர் பிலார் கான்செலா மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் போர்ஜா சுரேஸ் ஆகியோர் விவரித்துள்ளனர். கட்டுமானத் துறை, சுற்றுலா, போக்குவரத்து மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் நிலவும் ஆள் பற்றாக்குறையைப் போக்க, புலம்பெயர்ந்தோரைத் தகுந்த வேலைகளுடன் இணைக்கப் பல்வேறு வணிக நிறுவனங்களுடன் அரசு கைகோர்த்துள்ளது.
விண்ணப்பித்தவர்களில் 81 சதவீதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும், 57 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

