கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக விக்ரமரத்ன (ஹரக் கட்டா) என்பவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, 50 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரி, அதனை 20 கோடியாகக் குறைத்து, இறுதியில் 12 கோடி ரூபாவை அவரது மனைவியிடமிருந…

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக விக்ரமரத்ன (ஹரக் கட்டா) என்பவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, 50 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரி, அதனை 20 கோடியாகக் குறைத்து, இறுதியில் 12 கோடி ரூபாவை அவரது மனைவியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.

பிணை வழங்குவதற்குத் தகுந்த விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனத் தனது உத்தரவை அறிவிக்கும்போது நீதவான் குறிப்பிட்டார்.

இலஞ்ச சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை வழங்க வேண்டுமாயின், அதற்கு விசேட காரணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய கொழும்பு பிரதான நீதவான், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹொரண ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹந்தி ஆகியோரின் பிணை மனுக்களை நிராகரித்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.