சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் குழு கேயில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி லீக் போட்டியில், கொலம்பியா மற்றும் போர்த்துகல் அணிகள் மோதிய போட்டி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. கோல்கள் எதுவும் அடிக்கப்படாத போதிலும், ரசிகர்க…

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் குழு கேயில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி லீக் போட்டியில், கொலம்பியா மற்றும் போர்த்துகல் அணிகள் மோதிய போட்டி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. கோல்கள் எதுவும் அடிக்கப்படாத போதிலும், ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்த இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் குழுவின் முதல் இரு இடங்களைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இக்குழுவில் முதலிடம் பிடித்த கொலம்பியா அணி அடுத்த சுற்று போட்டியில் கானா அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம், குழுவில் இரண்டாமிடம் பிடித்த போர்த்துகல் அணி, குரோஷியாவை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே கொலம்பியாவின் ஜோன் கோர்துவா தலையால் முட்டிய பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது. போட்டியின் 17ஆவது நிமிடத்தில் ஜோன் அரியாஸ் கொடுத்த பந்தைப் பெற்ற கோர்துவா, றொக்கெட் வேகத்தில் உதைத்த பந்தைப் போர்த்துகல் கோல் காப்பாளர் டியகோ கொஸ்டா திறம்படத் தடுத்தார். மேலும் 5 நிமிடங்களுக்குப் பிறகு அரியாஸ் அடித்த பந்தை போர்த்துகல் வீரர் ரூபன் நெவெஸ் கோல் எலைக்கு அருகில் வைத்துத் தடுத்துக் காப்பாற்றினார்.

போர்த்துகலின் முயற்சிகளும் ரொனால்டோவுக்கு நேர்ந்த ஏமாற்றமும்:

போர்த்துகல் அணியின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பந்துப் பரிமாற்றங்கள் சரியாகக் கிடைக்காததால், அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அவர் அடித்த ஒரேயொரு பிறீ கிக்கும் நேராகக் கொலம்பிய கோல்காப்பாளரின் கைகளுக்குச் சென்றது.

நழுவிய கோல் வாய்ப்புகள்: போட்டியின் 39ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் புரூனோ பெர்னாண்டஸ் கோல் அடிக்கக் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பை கொலம்பிய கோல் காப்பாளர் தடுத்தார். அதேபோல், இடைவேளைக்கு 3 நிமிடங்களுக்கு முன்பு ஜோவா பீலிக்ஸ் நெஞ்சால் கட்டுப்படுத்தி அடித்த உதை இலக்கு தவறியது.

காணொளி உதவி மத்தியஸ்தரின் தீர்ப்பும் லியோவின் கடைசி நிமிட அச்சுறுத்தலும்:

இரண்டாம் பாதியில் போர்த்துகல் அணி தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய போதிலும், கொலம்பியா அணியே சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியது. போட்டியின் 73ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் றொட்றிகஸ் அடித்த பந்து தற்காப்பு வீரர் மீது பட்டுத் திசைமாறியது.

கடைசி நிமிட பரபரப்பு: போட்டி முடிவடைய ஒரு நிமிடம் இருந்தபோது, கொலம்பியாவின் டேவின்சன் சஞ்செஸ் தலையால் முட்டி அடித்த பந்து வலைக்குள் புகுந்தது. இதனால் கொலம்பியா வெற்றி பெற்றதாகக் கருதப்பட்ட நிலையில், காணொளி உதவி மத்தியஸ்தர் பரிசோதனையில் அது மிக நுண்ணிய அளவில் ஓஃப் சைட் என அறிவிக்கப்பட்டு கோல் இரத்துச் செய்யப்பட்டது.

கூடுதல் நேரத்தில் போர்த்துகலின் ரஃபேல் லியோ அடித்த பந்து கோல் கம்பத்தைக் கடந்து செல்ல, இரு அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி கோல்களின்றி சமநிலையில் முடிவடைந்தது.