யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்துள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கு வடக்கு அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்ப…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்துள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கு வடக்கு அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர்.

எனினும், தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், வைத்தியசாலை மாகாண சுகாதார அமைச்சின் கீழேயே தொடர்ந்தும் இயங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அபிவிருத்தி என்ற பெயரில் மீண்டும் மத்திய அரசு பறித்துக்கொள்ள முயற்சிப்பதாகவும், இதற்கு முன்னர் பல மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டதைப் போல தற்போது வைத்தியசாலைகளையும் மத்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வைத்தியசாலையை மத்திய அரசிடம் கையளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், மத்திய அரசின் கீழ் வைத்தியசாலை வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

சபையில் கடும் கருத்து முரண்பாடும் குழப்பமும் ஏற்பட்ட போதிலும், வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மறுநாள் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விடயம் மீண்டும் விவாதிக்கப்பட்டதுடன், அங்கும் வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டதுடன், வைத்தியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் நலன்புரி சங்க பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலையும் நடத்தினார்.

இதன்போது, வைத்தியசாலை தொடர்பில் மூன்று தெரிவுகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, வைத்தியசாலையை மாகாண சபையின் கீழேயே வைத்துக்கொண்டு மத்திய அரசின் ஊடாக நிதி, கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை வழங்குவது முதல் தெரிவாகும்.

இரண்டாவது தெரிவாக, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மட்டும் மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது என்றும், மூன்றாவது தெரிவாக முழு வைத்தியசாலையையும் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் மேலும் கலந்துரையாடி முடிவு எடுக்க அமைச்சு மட்டத்தில் விசேட குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அனுமதிகள் கிடைத்துள்ளதாகவும், 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்தக் கட்டடத்தை கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், வைத்தியசாலைக்குத் தேவையான ஆளணி மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மூடப்பட்ட தெல்லிப்பளை வைத்தியசாலை, யுத்தம் முடிவடைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது வடக்கு மீள்குடியேற்ற மக்களுக்கான முக்கிய ஆதார வைத்தியசாலையாக பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இயங்கி வருகிறது.

எனவே, வைத்தியசாலையின் நிர்வாகம் குறித்த அரசியல் விவாதங்களை விட, அதன் அபிவிருத்தி மற்றும் மக்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.