தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை அரச காணி என அறிவித்து, அதிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிறப்பித்திருந்த அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் அமைந்துள்ள…
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை அரச காணி என அறிவித்து, அதிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிறப்பித்திருந்த அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் அமைந்துள்ள 2.5 ஏக்கர் பரப்பளவுடைய காணி தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை அரச காணி என அறிவித்த தெல்லிப்பளை பிரதேச செயலர், அந்த காணியில் வசித்து வந்த தனியார் உரிமையாளரை வெளியேறுமாறு கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி அறிவித்தல் வழங்கியிருந்தார்.இதனையடுத்து, குறித்த காணி அரசுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்குமாறு காணி உரிமையாளர் கோரியிருந்த போதிலும், அதற்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காணி உரிமையாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணைகளின் போது, காணி அளவீட்டுத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், யாழ்ப்பாணம் காணிப் பதிவகம் மற்றும் விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அந்த ஆவணங்களில், குறித்த காணி அரசால் சுவீகரிக்கப்படவில்லை என்றும், அது தனியார் காணியாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, 2025 செப்டம்பர் 15 ஆம் திகதியிட்ட வெளியேற்றல் அறிவித்தலை ரத்து செய்யும் உறுதிகேள் எழுத்தாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அத்துடன், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மனுதாரர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தடையீட்டு எழுத்தாணையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

