யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று காலை யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த…
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று காலை யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இ. சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'சிசு செரிய' திட்டத்தின் கீழ், மாணவர்களிடம் அரைவாசிப் பயணக் கட்டணம் மட்டுமே அறவிடப்படுவதுடன், மீதமுள்ள தொகை அரசாங்க மானியமாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் உசனிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கி இரண்டு தனியார் பேருந்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் சேவையின் முக்கிய அம்சமாக, மாணவர்களின் விவரங்கள் மற்றும் பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட டிஜிட்டல் அட்டை வழங்கப்படுகிறது.
மாணவர்கள் பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் ஒவ்வொரு முறையும் அந்த அட்டையை தொடுதிரை கருவியில் பதிவு செய்யும் போது, அதற்கான நேரம் உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக பெற்றோரின் கைத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதன் மூலம் மாணவர்களின் தினசரி பயணம் பாதுகாப்பாக கண்காணிக்கப்படுவதுடன், பெற்றோர்களுக்கும் உடனடி தகவல் கிடைக்கும்.இந்த டிஜிட்டல் கண்காணிப்பு முறையை, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தின் உரிமையாளர் தனது சொந்தச் செலவில் நடைமுறைப்படுத்தியிருப்பது இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு 'சிசு செரிய' சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலும் இரண்டு புதிய சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

