எம். எச். எம். சியாஜ் இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான பீடி இலைகளை, தங்கொட்டுவ பொலிஸார் மீட்டுள்ளனர். ஆபத்தான கடல் வழியைக் கடந்து இலங்கைக் கரையை வந்தடைந்த இந்தச் சட்டவிரோத சரக்கு, அங்கிருந்து தந்திரம…
எம். எச். எம். சியாஜ்
இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான பீடி இலைகளை, தங்கொட்டுவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆபத்தான கடல் வழியைக் கடந்து இலங்கைக் கரையை வந்தடைந்த இந்தச் சட்டவிரோத சரக்கு, அங்கிருந்து தந்திரமாக லொறி ஒன்றில் ஏற்றப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களின் ஒவ்வொரு அசைவையும் தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான உளவுப்பிரிவினர் மிகவும் துல்லியமாகக் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வென்னப்புவ – வைக்கால், கம்மல பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று அதிவேகமாகப் பயணிப்பதாகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் அந்த லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முற்பட்டனர்.
இதன்போது, பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் லொறிச் சாரதி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது லொறியை மோதி விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் வாகனத்தை வேகமாகச் செலுத்தித் தப்பியோட முயன்றார். இருப்பினும், பொலிஸாரின் சாதுரியமான மற்றும் அதிரடியான நடவடிக்கையினால் லொறி முழுமையாகச் சுற்றி வளைக்கப்பட்டு, கடத்தல்காரர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதன்போது, லொறியைச் சோதனையிட்டதில் தலா 40 கிலோ எடையுள்ள பொலித்தீன் மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த, மொத்தம் 1,600 கிலோ கிராம் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. லொறியில் இருந்த வென்னப்புவ, போலவத்தை பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 38 வயதுடைய இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த அப்புஹாமி தலைமையிலான குழுவினரே இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு, தங்கொட்டுவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

