மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள மங்களாம்பட்டியில், மழையை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோதத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த மரபுப்படி, இந்த ஆண்டிற்கான 'ஆடிப் படையல்' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி, கி…

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள மங்களாம்பட்டியில், மழையை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோதத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த மரபுப்படி, இந்த ஆண்டிற்கான 'ஆடிப் படையல்' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இத்திருவிழாவையொட்டி, கிராம மக்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக, மதுரைவீரன் சுவாமிக்குச் சேவல்களைப் பலியிட்டு வழிபாடு நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பலியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டன. சேவல்கறியுடன் மொச்சைப்பயறு சேர்த்துச் சமைக்கப்பட்ட இந்த விசேஷ உணவை, ஆண்கள் மட்டுமே சமைத்தனர். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாழை இலை போட்டு பக்தர்களுக்குச் சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. இந்த அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு உணவருந்தினர்.

பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் என்பது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கமாகும். பெண்களுக்கு அன்னதானத்தில் அனுமதி இல்லை என்பதைப் பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த நம்பிக்கை மேலும் உறுதிப்படும் வகையில், விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரெனச் சாரல் மழை பெய்தது. இது பக்தர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.