கம்பளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய அவரது தாத்தாவை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா வைத்திய…

கம்பளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய அவரது தாத்தாவை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது, பாலியல் துஷ்பிரயோகத்துக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளை பொலிஸார், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான் சரசி ஸ்ரீ பரணமன், சந்தேகநபரை ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவலின்படி, சந்தேகநபர் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது மகனின் மகளாக இருப்பதுடன், சிறுமியின் தாயார் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முறையாக இந்த துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதன் பின்னரும் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.