மன்னார் மாவட்டம், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்கள், தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு காணிகள் வழங்கப்படாததால் கடந்த 15 ஆண்டுகளாகப் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளன. மன்னார் - மதவா…
மன்னார் மாவட்டம், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்கள், தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு காணிகள் வழங்கப்படாததால் கடந்த 15 ஆண்டுகளாகப் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளன.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இதில், திருமணம் முடித்துத் தனிக்குடும்பங்களாக மாறியுள்ள 35 குடும்பங்கள், சொந்தமாகக் காணி இல்லாத காரணத்தால் தற்காலிகக் கொட்டில்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் மிகவும் நெருக்கடியான சூழலில் வசித்து வருகின்றன.
தங்களுக்குத் தேவையான வீட்டுத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் காணி உரிமை அவசியமாகிறது.
தங்களைச் சுற்றி அரச காணிகள் பல இருந்தும், அங்கு குடியமரும் முயற்சியில் ஈடுபடும்போது வனவளத் திணைக்கள அதிகாரிகள் இடையூறு செய்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பாகப் பலமுறை கிராம அலுவலர், நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகள்:
கிராமத்தில் பல வீடுகள் நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடக்கும் நிலையில், நிலமற்ற மக்கள் வீதிகளில் நிற்க நேர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் போது, கிராமத்தைச் சுற்றி நீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். அப்போதும் தங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
"எங்களுக்கு வேறு எந்த உதவியும் வேண்டாம், குடிப்பதற்கு ஒரு துண்டு காணி மட்டும் போதும்" என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகளின் அசமந்தப் போக்கே தங்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் எனச் சாடுகின்றனர்.
தங்களின் மற்றும் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேச செயலாளர், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, தங்களுக்கு நிரந்தரக் காணிகளை வழங்க முன்வர வேண்டும் என செட்டியார் கட்டையடம்பன் கிராம மக்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்

