உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணம் ஒன்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இஸ்ரேலின் நலன்புரி மற்றும் சமூ…

உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணம் ஒன்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு இஸ்ரேலின் நலன்புரி மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சக இணையத் தளத்திலிருந்து பெறப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தில், உலகம் முழுவதும் செயல்படும் 150க்கும் மேற்பட்ட சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

குறி வைக்கப்படும் 15 தொண்டு நிறுவனங்கள் இந்த ஆவணத்தில் “ஒக்ஸ்ஃபாம்“, பிரான்ஸின் “பிரீமியர் அர்ஜென்ஸ்” மற்றும் ஜெர்மனியின் “மெடிகோ இன்டர்நேஷனல்” போன்ற சுமார் 15 சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பிரத்தியேகமாகக் குறி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கு எதிரான “பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்” (BDS) இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுதல், இஸ்ரேலை விமர்சித்தல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அனுமதியின்றி திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த ஆவணத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

இருப்பினும், ஒக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளன.

மனித உரிமை ஆர்வலர்களின் சுட்டிக்காட்டல் பாலஸ்தீனத்தில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களை இஸ்ரேல் பல ஆண்டுகளாகக் கண்காணித்து வந்ததற்கு இந்த ஆவணம் ஒரு தெளிவான சான்றாகும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

BDS இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் சட்டத்தை 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் இயற்றுவதற்கு முன்பாகவே, இத்தகைய அமைப்புகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை அந்நாடு தீவிரமாகத் தொடங்கியிருந்ததை இந்த அறிக்கை வெளியில் கொண்டு வந்துள்ளது.