கடந்த 2010 ஆம் ஆண்டு மொனராகலை பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் குற்றத்தீர்ப்பையும், அவருக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதியரசர்க…
கடந்த 2010 ஆம் ஆண்டு மொனராகலை பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் குற்றத்தீர்ப்பையும், அவருக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதியரசர்களான பி. குமாரரட்ணம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, எஸ். எம். ஜயந்த என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியது. தண்டனைச் சட்டக்கோவையின் 365B (2)(b) பிரிவின் கீழ், சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக அவர் குற்றவாளி என மொனராகலை மேல் நீதிமன்றம் கண்டறிந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இதன்போது உறுதிப்படுத்தியது.
சிறுமிக்கு அருகாமையில் வசித்து வந்த நபரே இக்குற்றத்தைச் செய்ததாக சட்டமா அதிபர் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தார். விசாரணையின் முடிவில், குறித்த நபரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மொனராகலை மேல் நீதிமன்றம், அவருக்கு எட்டு ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதித்தது. மேலும், 20,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 50,000 ரூபாவைச் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தனக்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பையும் தண்டனையையும் சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த குற்றவாளி, சாட்சியங்களை மதிப்பீடு செய்வதில் மேல் நீதிமன்ற நீதிபதி தவறாகச் செயல்பட்டதாகவும், அரசு தரப்பு சாட்சியங்களில் இருந்த முரண்பாடுகளைச் சரியாக ஆய்வு செய்யத் தவறியதாகவும் வாதிட்டிருந்தார்.
இந்த வாதங்களை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம் தெளிவான மற்றும் நம்பகமான சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவதானித்தது. அரசு தரப்பு குறித்த குற்றச்சாட்டைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கருதி, மேல் நீதிமன்ற நீதிபதி சரியான முடிவையே எடுத்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிலோ அல்லது தண்டனையிலோ தலையிடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மொனராகலை மேல் நீதிமன்றம் விதித்த குற்றத்தீர்ப்பையும் தண்டனையையும் உறுதிசெய்து, மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

