போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும், வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆவேசமாக வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) அன்று விசேட கூற்றை…
போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும், வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆவேசமாக வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) அன்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய அவர், “தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிப்படி, இராணுவமயமாக்கல் நீக்கப்பட்டு நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மட்டக்களப்பில் இரண்டு முகாம்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறேன், ஆனால் ஏனைய பகுதிகளில் நிலங்களை விடுவிப்பதில் ஏன் இவ்வளவு மந்தநிலை?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டி, கிளிநொச்சி இரணைமடு, கேப்பாப்பிலவு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் புள்ளிவிபரங்களைச் சமர்ப்பித்து, அவற்றை மீளப்பெற காலக்கெடுவை நிர்ணயிக்குமாறு அவர் சவால் விடுத்தார்.
ஆனால், அரசாங்கம் உரிய பதிலளிக்காது கால அவகாசம் கோரியது. பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் பொருளாதார மீட்சிக்கும் இந்த நில விடுவிப்பு கட்டாயமானது என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

