ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவில் இருந்த இருவரை காத்தான்குடி பொலிஸார் 3 வாள்களுடன் கைது செய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸாரின் தகவலின்படி, கடந்த மாதம் 29ஆம் திகதி வம்மிக்கேண…
ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவில் இருந்த இருவரை காத்தான்குடி பொலிஸார் 3 வாள்களுடன் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாரின் தகவலின்படி, கடந்த மாதம் 29ஆம் திகதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்திற்குப் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குழுவினர் தலைமறைவாகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, புதன்கிழமை (08) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா ரஜீவ்காந்தன் தலைமையிலான குழுவினர், சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வீட்டை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, 26 வயதுடைய “மாச்சி” என்றழைக்கப்படும் மதுஷன் மற்றும் 19 வயதுடைய மற்றொருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 3 வாள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவதுடன், மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, 15 முதல் 28 வயதுக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

