ஆறு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை பாதிக்கும் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாலைமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தி…

ஆறு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை பாதிக்கும் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழரசுக் கட்சி முன்னெடுத்து வரும் இந்த கூட்டமைப்பு முயற்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக அமைந்ததாக குறிப்பிட்ட அவர், மீண்டும் இதுபோன்ற அரசியல் இணைவுகள் தமிழ் மக்களின் நிலைமையை பாதிக்கக்கூடும் என தெரிவித்தார்.

மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் தங்களது நிலைப்பாடுகளை மாற்றி வருவதாகவும், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட தங்களது அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காகவே கூட்டணிகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படும் சில கட்சிகள், தேர்தல்களின் பின்னர் பிரிந்து செல்வதால், அதன் பாதிப்பு தமிழ் மக்களுக்கே ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆறு கட்சிகளின் இந்த கூட்டுச் சேர்வுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அரசியல் செய்ய முடியாதவர்கள் புதிய தலைமுறையினருக்கு இடமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டமைப்பு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அந்தனிசில் ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.