இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில், அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ம…

இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில், அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மட்டக்களப்பில் பரதகலாலயா என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நடத்தி வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான சுபித்ரா கிருபாகரன், இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதன் கிளைகளை உருவாக்கி, ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதநாட்டியக் கலையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.பல தசாப்தங்களாக கலைப் பணியில் ஈடுபட்ட அவர், தனது மாணவர்கள் மூலம் பரதக் கலையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சுகவீனம் காரணமாக அவர் காலமானார்.

அவரது இறுதிக்கிரியைகள் நேற்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதன்போது, அவரது மாணவ, மாணவிகள் தமது குருவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் கண்ணீருடன் நாட்டிய சமர்ப்பணத்தை நிகழ்த்தினர்.

குருவின் நினைவாக இடம்பெற்ற இந்த நாட்டியாஞ்சலி, அங்கு கூடியிருந்த அனைவரையும் உருகச் செய்ததுடன், அதன் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பரதக் கலையின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த சுபித்ரா கிருபாகரனின் கலைச் சேவை, அவரது மாணவர்களின் மூலம் என்றும் தொடரும் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.