குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சொகுசு கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக 8 வயது சிறுவன் மீது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை…

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சொகுசு கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக 8 வயது சிறுவன் மீது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சிறுவன் காருக்கு தீ வைத்தார் என்பதை நிரூபிக்கும் எந்தவொரு நேரடி சாட்சியமோ அல்லது தடயவியல் ஆதாரமோ இதுவரை கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3ஆம் திகதி, குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இடம்பெற்றிருந்த சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவர் என்பதும், சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அவர் காரின் அருகே சென்றிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சிறுவனே தீ விபத்துக்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால், அவரை குற்றவாளியாக சித்தரிக்கும் தகவல்களை நம்பவோ பகிரவோ கூடாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், காரில் தீப்பற்றியதற்கான காரணத்தை அறிவதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.