ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளை தாக்கிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) மற்றும் உலக சுகாதார…
ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளை தாக்கிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆதரவுடன் இயங்கும் யூரோமோமோ (EuroMOMO) அமைப்பின் தரவுகளின்படி, ஜூன் 22 முதல் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 10,650 உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 9,000-க்கும் அதிகமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
கடும் வெப்பத்தால் ஏற்படும் வெப்பவாதம், இதய நோய்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் தீவிரமடைதல் போன்ற காரணங்களே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் மிக அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக யூரோமோமோ குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து பதிவான தரவுகளில் பெல்ஜியத்தில் இது மிக மோசமான வெப்ப அலை தொடர்பான மரண விகிதமாக அமைந்துள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெப்ப அலைகளின் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் சுமார் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கமே இந்த தீவிர வெப்ப அலைக்கு முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுடன், இந்த வானிலை நிலைமை பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவில் மின்சார விநியோகம் மற்றும் கல்வி நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

