பாறுக் ஷிஹான் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், நிந்தவூர் 23, அ…

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், நிந்தவூர் 23, அட்டப்பளம், சகாத் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் வாஹிது வஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (05) மாலை அட்டப்பளம் பகுதியில் நிந்தவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, அப்பகுதிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த 'ஜெமில்' என்பவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது, ஜெமிலிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினும், மற்ற இருவரிடமிருந்து தலா 60 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கிடைத்த மேலதிக தகவலின் பேரில், மற்றொரு வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், 3 கிராம் 100 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நான்காவது சந்தேகநபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை (06) அதிகாலை 3.30 மணியளவில் சந்தேக நபர்களில் ஒருவரான வஜீத் என்பவர் வழமைக்கு மாறான முறையில் நடந்துகொண்டுள்ளார். உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், அவரை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த வஜீத் என்ற சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்தபோது தான் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் அடங்கிய பக்கெட்டை விழுங்கிவிட்டதாக, அவருடன் சிறைக் கூண்டில் இருந்த மற்றொரு கைதி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் அதனை விழுங்கியதாகவே கூறப்படுகின்றது.