கனகராஜா சரவணன் "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன், இரண்டு கொள்கைகளைக் கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவுத் தூபி அமைப்பதாக இருந்தால், அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டுமே தவிர, பொது இடத்தில் அமைக்கக் கூடாது. கிழக்கு மண்ணில் அவருக்குச்…
கனகராஜா சரவணன்
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன், இரண்டு கொள்கைகளைக் கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவுத் தூபி அமைப்பதாக இருந்தால், அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டுமே தவிர, பொது இடத்தில் அமைக்கக் கூடாது. கிழக்கு மண்ணில் அவருக்குச் சிலை அமைப்பதற்கான எவ்வித அங்கீகாரமும் கிடைக்காது" என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.
ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன், ஞாயிற்றுக்கிழமை (12) அன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"மட்டக்களப்பு, கிரானில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுச் செயற்பட்டு வந்த நிலையில், நான் வெளிநாடு சென்றிருந்தேன். அங்கு எனக்குத் தொடர்ச்சியாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சுமார் ஆறு மாத காலம் கட்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறான இடைவெளி ஏற்பட்டிருந்த போதும், கட்சி வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எங்கள் நிகழ்ச்சி நிரலில், இந்தத் தமிழரசுக் கட்சியை கிழக்கு மண்ணிலிருந்து விரட்டியடிப்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இது சிலருக்கு ஏளனமாகத் தோன்றலாம், ஆனால் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.
கடந்த சில வாரங்களாகச் சிறைச்சாலைகளில் நடைபெற்று வரும் சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் அதற்கான காரணங்களை இந்த அரசாங்கம் மிக விரைவில் கண்டறிய வேண்டும். அக்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காதிருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு உருவச் சிலை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதை நான் அறிந்துள்ளேன். எனவே, அந்த நினைவுத் தூபி அமைப்பதாக இருந்தால், அது அவர்களது சொந்த இடங்களிலேயே அமைய வேண்டும்; பொது இடங்களில் அமைக்கக் கூடாது.
இரண்டு கொள்கைகளைக் கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு, கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது. அவ்வாறு பொது இடத்தில் சிலை அமைக்கும் பட்சத்தில், நாங்கள் எமது அமைப்பு சார்பாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அதனை அகற்றுவதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்வோம்.
இது வன்முறை, மிரட்டல் அல்லது அச்சுறுத்தல் எனப் பேசுவதற்கு முன்னரே இதனை நாங்கள் அறிவிக்கின்றோம். இருந்தபோதும், அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் சிலையை அமைக்க முயன்றால், அது அகற்றப்படும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

