கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் போராட்டம் ஒன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(21.07…

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் போராட்டம் ஒன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(21.07.202) காலை 11 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் நடந்த மோசமான சம்பவம் சிகிச்சைக்காகத் தனது தாயாரை அழைத்து வந்த நபர் ஒருவரிடம், அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தாயாரின் உடலை உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்ல அந்நபர் முற்பட்டுள்ளார். இதன்போது, அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் நடைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே உடலைக் கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று நண்பகல் 1 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை ஊழியர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில், வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வைத்தியசாலை ஊழியர்கள் மீதான நடவடிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியிலேயே பொதுமக்கள் நலன் கருதி நாங்கள் சேவையாற்றி வருகிறோம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும், சேவையில் ஈடுபடுவதில் தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, எமக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். முக்கியமாக, வைத்தியசாலை வளாகத்தினுள் பொலிஸ் பாதுகாப்புச் சாவடி ஒன்றினை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டக்காரர்கள் "நிறுத்து நிறுத்து... ஊழியர்கள் மீதான தாக்குதலை நிறுத்து!", "வேண்டும் வேண்டும்... வைத்திய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!" போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.