இலங்கையின் பொருளாதார வரலாற்றை எழுதும்போது தேயிலைத் துறையைத் தவிர்த்து எழுத முடியாது. அதேபோன்று, தேயிலைத் துறையின் வரலாற்றை எழுதும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தியாகத்தையும் உழைப்பையும் புறக்கணிக்க முடியாது. நூற்றாண்டுக்கும் மேலாக மலைநாட்டின் கடினமான காலநிலையிலும், மிகக் குற…

இலங்கையின் பொருளாதார வரலாற்றை எழுதும்போது தேயிலைத் துறையைத் தவிர்த்து எழுத முடியாது. அதேபோன்று, தேயிலைத் துறையின் வரலாற்றை எழுதும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தியாகத்தையும் உழைப்பையும் புறக்கணிக்க முடியாது.

நூற்றாண்டுக்கும் மேலாக மலைநாட்டின் கடினமான காலநிலையிலும், மிகக் குறைந்த வசதிகளுடனும் உழைப்புக்கேற்ற ஊதியமின்றி உழைத்த மலையக மக்கள், இலங்கைக்கு பில்லியன் கணக்கான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளனர்.

ஆனால் வரலாறு சொல்லும் இன்னொரு உண்மை என்னவென்றால், நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிய இந்த பெருந்தோட்டத் துறை, கடந்த பல தசாப்தங்களாக அரசியல் கொள்கைகளில் பின்தள்ளப்பட்ட துறையாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும்.

முடங்கும் நிலையில் தேயிலை உற்பத்தி

1990களுக்குப் பின்னர் பல அரசுகள் சிறுதோட்ட உரிமையாளர்களை உருவாக்கும் கொள்கைக்கு முன்னுரிமை அளித்தன. உர மானியம், காணி ஒதுக்கீடு, இலவச ஆலோசனை சேவைகள், பயிற்சி, நிதி உதவிகள், தேயிலைச் சபையின் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறுதோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்தியுள்ளன.

இந்த எந்த திட்டத்திலும் பெருந்தோட்டப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பதே உண்மை அதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது காணியுரிமை இல்லாமையே என்றால் அதுவும் பிழை என்று கூறுவதற்கில்லை.

அதன் விளைவாக, இன்று இலங்கையின் தேயிலை உற்பத்தியில் பெரும் பங்கு சிறுதோட்டங்களிடமிருந்து கிடைக்கிறது.

நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான மூலப்பொருளில் சுமார் 78 சதவீதத்தை சிறுதோட்ட உரிமையாளர்களே வழங்குகின்றனர் என்பது, இந்தக் கொள்கையின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.

இது நாட்டிற்கு நல்லதுதான். ஏனெனில் அதிகமான உற்பத்தியாளர்கள் உருவாகிறார்கள். கிராமப்புற வருமானம் உயர்கிறது. பொருளாதார வாய்ப்புகள் பரவலாகின்றன. ஆனால் இதில் பெருந்தோட்டங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ள என்பது யாவரும் அறிந்த உண்மையே. இதே வேளையில் ஒரு ஆபத்தான போக்கும் உருவாகியுள்ளது.

பராமரிப்பின்றி மூடப்படும் தொழிற்சாலைகள்

சிறுதோட்டத் துறை தொடர்ந்து வளர்ந்த நிலையில், பெருந்தோட்டத் துறையை நவீனமயப்படுத்தும் முயற்சிகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. பல தோட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர்.

பல தோட்டங்களில் இன்னும் பழைய உற்பத்தி முறைகளே தொடர்கின்றன.இயந்திரமயமாக்கல், மீள் நடுகை, தொழிலாளர் நலன், வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, குடிநீர், அடிப்படை வசதிகள் போன்ற பல துறைகளில் பாரிய முதலீடுகள் தேவைப்படுகின்றன.

இந்த நிலை நீடித்தால், “பெருந்தோட்டங்கள் இல்லாமல்கூட நாடு இயங்கிவிடும்” என்ற தவறான எண்ணம் கொள்கை வகுப்பாளர்களிடையே உருவாகும் அபாயம் உள்ளது.

பெருந்தோட்டங்களின் வளர்ச்சிக்கு புதிய பங்களிப்பு சிலோன் தேயிலை கிராமங்கள் 500 - நல்ல திட்டம், ஆனால்... மக்கள் அரசாங்கம் தற்போது “சிலோன் தேயிலை கிராமங்கள் 500” என்ற புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாட்டின் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதும், புதிய சிறுதோட்ட உரிமையாளர்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

ஆனால் ஒரு அடிப்படை கேள்விக்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும். இந்த புதிய தேயிலை கிராமங்கள் எங்கே உருவாக்கப்படுகின்றன? அவை ஏற்கனவே சிறுதோட்டங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் உருவாக்கப்படுமா?

அல்லது பெருந்தோட்டப் பகுதிகளிலும் திட்டமிட்டு உருவாக்கப்படுமா? இந்தக் கேள்விக்கான பதில்தான் மலையக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது.

78 சதவீதம் இன்று - நாளை 90 சதவீதமா? இன்று சிறுதோட்டங்கள் ஏற்கனவே பெரும்பான்மையான உற்பத்தியை வழங்குகின்றன. அரசின் புதிய திட்டங்கள் தொடர்ந்து இந்தத் துறையை மட்டுமே ஊக்குவித்தால், எதிர்காலத்தில் இந்தப் பங்கு மேலும் அதிகரிக்கும்.

அப்போது, பெருந்தோட்டங்களைப் பாதுகாக்கவும், அவற்றில் முதலீடு செய்யவும், தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தவும் தேவையில்லை என்ற எண்ணம் உருவாகலாம்.

இது பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று பெருந்தோட்டங்களையே நம்பி வாழ்கின்றன.

அவர்களின் வேலைவாய்ப்பு, குடியிருப்பு, சமூக பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், எதிர்காலம் அனைத்தும் இந்தத் துறையோடு பிணைக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டங்கள் பலவீனமடைந்தால், பாதிக்கப்படுவது நிறுவனங்கள் மட்டுமல்ல் முழு மலையக சமூகமே.

அரசாங்கம் சிந்திக்க வேண்டிய மாற்று வழி தேயிலை கிராமத் திட்டத்தை பெருந்தோட்டத் துறையுடன் இணைத்து செயல்படுத்த முடியாதா? பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாமல் உள்ள நிலங்கள், குறைந்த உற்பத்தி தரும் காணிகள் அல்லது பொருத்தமான பகுதிகளை திட்டமிட்டு மலையக மக்களுக்கு நீண்டகால குத்தகை அல்லது உரிமை அடிப்படையில் வழங்கலாம். அந்த நிலங்களில் திட்டமிட்ட “தேயிலை கிராமங்கள்” உருவாக்கப்படலாம். அங்கு வாழும் தொழிலாளர்களே சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படலாம்.

அவர்களுக்கு காணி, தரமான தேயிலை நாற்றுகள், உர மானியம்,தொழில்நுட்ப ஆலோசனை,குறைந்த வட்டி கடன்,சந்தைப்படுத்தல் வசதிகள்,கூட்டுறவு அமைப்புகள் என அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் வழங்கலாம்.

வருமானம் அதிகரிப்பு இந்த அணுகுமுறையால் அரசு ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளை அடைய முடியும். ஒருபுறம் பெருந்தோட்டங்கள் தொடர்ந்தும் உற்பத்தியில் இருக்கும்.

மறுபுறம் மலையக மக்கள் வெறும் கூலித் தொழிலாளர்களாக அல்லாமல், சொந்த உற்பத்தியாளர்களாகவும் தொழில் முனைவோராகவும் உருவாக முடியும்.

இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து வறுமை குறையும். இளைஞர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை குறையும்.

காணி உரிமை மூலம் சமூகப் பாதுகாப்பு அதிகரிக்கும். மலையகத்தின் பொருளாதாரம் புதிய அடித்தளத்தைப் பெறும். மலையக மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை மலையக மக்கள் பல தலைமுறைகளாக உழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் உழைத்த நிலத்தின் உரிமையாளர்களாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. இன்று அந்த வரலாற்றை மாற்றும் வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.

சிறு தோட்டங்களை ஊக்குவிப்பு நடவடிக்கை

சிலோன் தேயிலை கிராமங்கள் 500 என்பது வெறும் உற்பத்தித் திட்டமாக அல்லாமல், மலையக மக்களின் பொருளாதார விடுதலைத் திட்டமாக மாற்றப்பட வேண்டும். அதற்கு பெருந்தோட்டப் பகுதிகளிலேயே திட்டமிட்ட தேயிலை கிராமங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமான தீர்வாகும்.

தேயிலை கிராமங்களுக்கும் பெருந்தோட்டங்களுக்கும் இடையே போட்டி இருக்க வேண்டிய அவசியமில்லை.இரண்டும் இலங்கையின் தேயிலைத் துறையின் இரு வலுவான தூண்கள். அரசாங்கம் சிறுதோட்டங்களை ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில், பெருந்தோட்டத் துறையையும் நவீனமயப்படுத்தி பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு காணி உரிமை, உற்பத்தி வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வழங்கும் வகையில் தேயிலை கிராமம் திட்டம் பெருந்தோட்டப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு நடந்தால், அது ஒரு திட்டத்தின் வெற்றியாக மட்டும் இருக்காது. இலங்கையின் தேயிலைத் துறைக்கு புதிய அத்தியாயத்தையும், மலையக மக்களுக்கு புதிய வரலாற்றையும் எழுதும் மகத்தான தேசிய முயற்சியாக அமையும்.