இலங்கையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களின் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு பொதுவான மேடையை உருவாக்கத் தீர்மானித்துள்ளன . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங…

இலங்கையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களின் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு பொதுவான மேடையை உருவாக்கத் தீர்மானித்துள்ளன .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து, கொழும்பு ரேணுகா ஹோட்டலில் திங்கட்கிழமை (13) அன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், "இந்த மேடை வகுப்புவாத நோக்கம் கொண்ட அரசியல் கூட்டணி அல்ல. நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்களோ அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவானவர்களோ அல்ல; மாறாக, இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எங்களின் நோக்கம்" என்று கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவரும் இதேபோன்ற கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மலையகச் சமூகம் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அரசாங்கம் அனைத்து சமூகங்களையும் சமமான இலங்கை பிரஜைகளாக நடாத்துவதை உறுதி செய்வதற்கும் இந்தத் கூட்டு பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

“முடிந்தவரை அனைத்து விடயங்களிலும் பொதுவான நிலைப்பாட்டை எட்ட முயற்சிப்போம்; ஆனால், இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் கட்சிகள் தங்கள் சொந்த நிலைப்பாட்டைத் தொடர அனுமதிக்கப்படும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) பதில் பொதுச் செயலாளர் தெரிவிக்கையில், இந்தச் சங்கம் முக்கியமாக அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பு, காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் பெரும்பான்மைவாதத்தை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றுக்காகப் பாடுபடும் என்று தெரிவித்தார்.

“தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தபடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்” என்றும் அவர் கூறினார். இந்த ஒன்றிணைப்பு ஒரு தேர்தல் கூட்டணியாக இருக்காது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

“சிறுபான்மைக் கட்சிகளுக்கு என ஒரு பொதுவான குரல் வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றவே நாங்கள் முயற்சிக்கிறோம்” என்று சுமந்திரன் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) மற்றும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா போன்ற பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், எதிர்காலத்தில் இத்தகைய பேச்சுவார்த்தைகளுக்குச் சாத்தியம் உள்ளதாகத் தெரிவித்தார்.

லெனின்ராஜ்