உகந்தமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்கான காட்டுப்பாதை, வெள்ளிக்கிழமை(10) அதிகாலை 5.30 மணியளவில் பக்திப் பரவசத்துடன் திறந்து வைக்கப்பட்டது. ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் முன்னிலையில் இ…

உகந்தமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்கான காட்டுப்பாதை, வெள்ளிக்கிழமை(10)  அதிகாலை 5.30 மணியளவில் பக்திப் பரவசத்துடன் திறந்து வைக்கப்பட்டது.

ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் முன்னிலையில் இப்பாதை திறந்து வைக்கப்பட்டதையடுத்து, கதிர்காமத்தை நோக்கி அடியார்கள் காட்டுப்பாதை ஊடாகப் பயணத்தைத் தொடங்கினர். இப்பயணத்தின் முதல் நாளில் மட்டும் சுமார் 10,000 அடியார்கள் காட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள மற்றும் பிரியந்த, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன், கிழக்கு மாகாண கலாசாரப் பண்பாட்டுத் துறை பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது உகந்தமலைப் பகுதி முழுவதும் அடியார்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களுக்கான தங்குமிடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், பலர் மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை, பஸ்களிலும் கால்நடையாகவும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர்ச்சியாக வந்திறங்கிய வண்ணம் உள்ளனர்.

ஆலய வளாகத்தில் பக்தர்களுக்குத் தேவையான அன்னதானங்கள் தினமும் வழங்கப்பட்டு வருவதாகவும், போக்குவரத்துக் கட்டமைப்புகள் முறையாக ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் சுதா தெரிவித்தார்.