அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில நபர்கள் வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அஸ்வ…

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில நபர்கள் வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அஸ்வெசும பயனாளர்களைத் தொடர்புகொண்டு, தாங்கள் நலன்புரி நன்மைகள் சபையின் தலைமையக அதிகாரிகள் எனக் கூறி தகவல்களைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களைப் புதுப்பித்தல், பதிவு உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, அதற்காக பணம் செலுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுப்பதாகவும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய தொலைபேசி அழைப்புகள் அல்லது பணம் கோரும் நடவடிக்கைகள் நலன்புரி நன்மைகள் சபையின் அனுமதியோ அறிவுறுத்தலோ இன்றி மேற்கொள்ளப்படுவதாக சபை வலியுறுத்தியுள்ளது.

எனவே, இதுபோன்ற அழைப்புகள் அல்லது சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவிலோ முறைப்பாடு செய்யுமாறு பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அஸ்வெசும பயனாளர்கள் எவரும் தங்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது பணத்தை அறியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும், மோசடிகளில் சிக்காமல் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தியுள்ளது.