அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த பேருவளை பகுதியிலுள்ள பல்பொருள் அங்கா…
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த பேருவளை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றம் 10 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
குறித்த அங்காடியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 355 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அரசின் வர்த்தமானி அறிவிப்பின்படி, கீரி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை ஒரு கிலோ 260 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கிலோ கீரி சம்பா அரிசிப் பொதிகள் 1,775 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, களுத்துறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் குறித்த அங்காடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
வழக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டனர். அதன்படி நீதிமன்றம் பல்பொருள் அங்காடிக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதித்தது.
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதிகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை (MRP) கட்டாயம் சரிபார்க்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அல்லது தரமற்ற, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பாக 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

