நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகக் கடமை நிறைவேற்று அதிபர்களாகப் பணியாற்றும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும், இன்று (20) காலை 10.00 மணியளவில் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு ம…

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகக் கடமை நிறைவேற்று அதிபர்களாகப் பணியாற்றும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும், இன்று (20) காலை 10.00 மணியளவில் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய 'கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்க'ப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததைத் தொடர்ந்தே, அவர்கள் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய கோரிக்கைகள்:

நீண்டகாலமாகச் சேவையாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்.

வயது எல்லையைக் கடந்த முன்னாள் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குதல்.

அதிபர் சேவைக்குரிய சம்பளம், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய நலன்களை வழங்குதல்.

திடீர் இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர் பணிக்கு மீள அனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி, மனிதநேயமான தீர்வுகளை வழங்குதல்.

கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு இணைந்து நிலையான கொள்கையொன்றை உருவாக்குதல்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனை:

போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "உள்நாட்டு யுத்தம், 2004 சுனாமி, வெள்ளப் பேரழிவுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலம் எனப் பல்வேறு சவாலான சூழ்நிலைகளிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பாடசாலைகளை வழிநடத்தியவர்கள் நாங்களே. ஆனால், இன்று எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல், திடீரென ஆசிரியர் பணிக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் எமது தொழில்முறை கௌரவத்தைச் சிதைக்கின்றன" எனத் தெரிவித்தனர்.

மேலும், ஏனைய மாகாணங்களில் இல்லாத வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தங்களுக்கு எதிராகப் பாரபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். நிர்வாக அனுபவம் கொண்ட தங்களை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வலயக் கல்வி அலுவலகங்களில் கல்வி அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக்கொள்ளுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

முழக்கங்கள்:

"எமது சேவைக்கு நீதி வேண்டும்; காலதாமதம் வேண்டாம்!", "கடமை செய்தோம்; உரிமையையும் வழங்குங்கள்!", "நிர்வாகம் இயங்க எம்மை மதியுங்கள்!", "நீதி தாமதமானால் அது அநீதியே!", "அரசியல் வேண்டாம்; நிர்வாக நீதி வேண்டும்!" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆளுநர் தங்களின் மகஜரைப் பொறுப்பேற்க மறுத்த நிலையில், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் சுழற்சி முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.