Colombo (News 1st) 'தேயிலை கொழுந்துகளால் செழிக்கும் நாடு' எனும் தொனிப்பொருளில் 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் 'Ceylon Tea Village' தேசிய வேலைத்திட்டம் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் ஆரம்ப நிகழ்வு கம்பளையில் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நடைபெற்றது.கிராமப்…

Colombo (News 1st) 'தேயிலை கொழுந்துகளால் செழிக்கும் நாடு' எனும் தொனிப்பொருளில் 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் 'Ceylon Tea Village' தேசிய வேலைத்திட்டம் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் ஆரம்ப நிகழ்வு கம்பளையில் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நடைபெற்றது.கிராமப்புற வறுமையை ஒழிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என அவர் இதன்போது தெரிவித்தார்.2030ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாக உயர்த்தி தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்காகும். இதனடிப்படையில் 'Ceylon Tea Village' தேயிலை கிராமத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் சிறு தேயிலை தோட்டத்துறை நவீனமயமாக்கப்படுவதுடன், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் தேயிலை கைத்தொழிலின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.தேயிலை விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல், வருமான வளர்ச்சி மற்றும் பெறுமதிசேர் தேயிலை உற்பத்திகளை ஊக்குவித்தல், தேயிலை கைத்தொழிலை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைத்தல் என்பனவும் இந்த திட்டத்தின் நோக்கங்களாகும்.இந்த திட்டத்தின் கீழ் நவீன மற்றும் நிலையான விவசாய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு முறையை வலுப்படுத்துதல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.ஒவ்வொரு தேயிலை கிராமத்திற்கும் அதிக அடர்த்தி கொண்ட தேயிலை பயிர்ச்செய்கை மாதிரி காணிகளும் புதிய தேயிலைக்கன்று நாற்றுமேடைகளும் வழங்கப்படவுள்ளன.அத்துடன் சிறு தேயிலை தோட்டங்களுக்கான காப்புறுதி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், சலுகைக் கடன் வசதிகள் மற்றும் கைவினை தேயிலை தயாரிப்பதற்கான பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கும் இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இவ்வருடத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள 144 தேயிலை பரிசோதகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் 144 தேயிலை கிராமங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.