எதிர்வரும் எல் நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ளும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட விவசாயக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் அண்மையில் (15) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. எல் நினோ காலநிலை மாற்றம் விவசாயத் துறையில் ஏற்படுத்…
எதிர்வரும் எல் நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ளும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட விவசாயக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் அண்மையில் (15) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. எல் நினோ காலநிலை மாற்றம் விவசாயத் துறையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அதனை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பயிர்ச்செய்கைத் திட்டமிடல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சின் வட மாகாண செயலாளர் எஸ். சிவஸ்ரீ, எல் நினோ தாக்கம் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்கவும், மாவட்ட வாரியாக பயிர்ச்செய்கைத் திட்டமிடலை மேற்கொள்ளவும் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
வட மாகாணத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து மாவட்டங்களின் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப செயற்திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும், அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் முதலாவது கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வறட்சி நிலை ஏற்பட்டால் குடிநீர் மற்றும் உணவு உற்பத்திக்குத் தேவையான நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், மழைநீரை சேமித்தல், குளங்களை அபிவிருத்தி செய்தல், குறைந்த நீரில் பயிரிடக்கூடிய முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார். வட மாகாணத்தின் பிரதான விவசாயமான பெரும்போக நெல் உற்பத்தியை வெற்றிகரமாக முன்னெடுத்து, அதிக விளைச்சலைப் பெற விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப், மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சகிலா பானு, விவசாயத் திணைக்கள அதிகாரிகள், ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

