எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறையில் உள்ள QR ஒதுக்கீட்டு முறையை தற்போது நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் மற்றும் விலைகளில் இன்னும் நிலைத்தன்மை ஏற்படாத காரணத்தால், QR நடைமுற…
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறையில் உள்ள QR ஒதுக்கீட்டு முறையை தற்போது நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் மற்றும் விலைகளில் இன்னும் நிலைத்தன்மை ஏற்படாத காரணத்தால், QR நடைமுறையை தொடர்ந்து அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, QR முறை எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதுடன், நாட்டின் வெளிநாட்டு நாணய செலவீனத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
மேலும், மத்திய கிழக்கில் யுத்த நிலைமை மீண்டும் தீவிரமடைந்தால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசைகள் உருவாகும் அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கிலும் இந்த நடைமுறை தொடரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போதைய சர்வதேச பதற்றம் காரணமாக இதுவரை நாட்டின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

