ஸ்ரீலங்கன் வானூர்தி நிறுவனத்துக்காக 10 எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்தபோது, ஐரோப்பிய நிறுவனமொன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கையூட்டலாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களையும் சாட்சிகளையும் தேடி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கை…

ஸ்ரீலங்கன் வானூர்தி நிறுவனத்துக்காக 10 எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்தபோது, ஐரோப்பிய நிறுவனமொன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கையூட்டலாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களையும் சாட்சிகளையும் தேடி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.குறித்த எயார் பஸ் கொள்வனவு ஒப்பந்தத்தின்போது பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் நிமல் பெரேரா என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு இதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்திருந்தது.இந்தநிலையிலேயே, இந்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஸ்ரீலங்கன் வானூர்தி நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகன் சமிந்திர ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.