தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிநாட்டு யூடியூப் குழுவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லால் பிரியந்த என்ப…

தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிநாட்டு யூடியூப் குழுவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லால் பிரியந்த என்பவர் அண்மையில் யூடியூப் காணொளி ஒன்றின் மூலம், ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தின் நீதவான் எரந்தி ஹேவாவசம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நீதிச் சேவை ஆணைக்குழு நேற்றுமுன்தினம்(16.07.2026) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நீதவான் எரந்தி ஹேவாவசத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவைத் தலைவராக கொண்டு செயற்படும் நீதிச் சேவை ஆணைக்குழு, மாஜிஸ்திரேட் எரந்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றிய உத்தால சுவந்துருகொடவை அங்குணகொலபெலஸ்ஸ குற்றவியல் நீதவான் பதவிக்கு நியமித்துள்ளது.

நீதவான் உத்தால சுவந்துருகொட அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று பல சர்ச்சைக்குரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வரும், இலங்கையின் சட்டத்துறையில் மிகவும் மதிக்கப்படுபவருமான சிரேஷ்ட நீதிபதி இசுரு நெத்திகுமாராவும், நீதித்துறை சேவை சங்கத்தில் உயர் பதவியில் இருந்தபோதே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

அவரும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் தற்போது கடமையாற்றி வருகிறார். நீதவான் உத்தால சுவந்துருகொடாவின் சகோதரிகளில் ஒருவரும் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், அவரும் இடமாற்றமொன்றை எதிர்பார்த்துள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.